பத்திரிகைத் தாளில்
படமாகிக் கிழிந்து
வடைசுற்றி வழங்கப்பட்டு...
காசாகிக்
கள்ளுக் கடைகளில்
கை மாறி...
தபால் தலையாகி
எச்சிலால் ஒட்டப்பட்டு...
முத்திரை குத்தி
முகங் கிழிபட்டு...
சிலையாகி
நடுத்தெருவில் நிற்கிற
என் தேசத்துத்
தந்தையின்
புன்னகை முகத்தில்
கண்ணுகுத்த நீராய்க்
காக்கையின் கழிவு.
தினமணி கதிர்- ஓலிபெருக்கி- கடிதமாக 20.9.1987