செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

காற்றில்...



ஓடையில்
நிழலிறங்கி நீராட
முடித்துக் கரையேறி
முடியுலர்த்தும்
மரங்கள்.

நனைந்த
துணியுலர்த்தும்
செடிகள்
கிளைக் கையால்
ஈரம் காய.

வளைந்து
கரைப் புற்கள்
கற்களோடு
காதல் பேசும்
காற்றில்.

தீபம். ஜனவரி 1980.

புதன், 23 ஆகஸ்ட், 2017

உள்ளூர்ப் பயணம்



வழக்கம் போலக்
கூட்டம்.
நின்று கொண்டே
சென்னை சென்று
கண்ணனைச் சந்தித்து,

பள்ளிச் சிறுமியாய்ப் பழகிய
மாலாவைக்
குழாய்நீர்க் குடத்தொடு
கோவிலில் பார்த்துப்
புன்னகைத்து.

மாலையில்
கடற்கரையில்
அம்பியுடன் அமர்ந்து
அரட்டை அடித்துவிட்டு,

படித்துரை நிறுத்தத்தில்
பழகிய கால்கள்
இறங்க,
அவசரமாய்
மதுரை திரும்பும்
மனம்.


சதங்கை ஆக. 1976

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

வறட்சி



தொலைவில்
பகையை எட்டிய பூமி
தன் அசுரக் கரங்களின்
கூரிய விரல்களால் குத்திக் கிழிக்கும்.
குருதி தோயக் குலைந்து நகரும்
வானம்.

வெற்றியைக் காண விரைந்து போனால்
தடித்த நரம்புகளோடும்
முறுக்கேறிய தசைகளோடும்
அசுரக் கரங்கள் மறைய
அம்மண மரங்கள் நிற்கும்.

தோற்றுப் போய்
வாயைப் பிளந்துகொண்டு
மரித்துக் கிடக்கும்
கீழே
பூமி.


சதங்கை - தீபாவளி மலர். நவம்பர் 1975

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

உள்ளங்கைச் சில்லறை



எத்தனை முறை எண்ணிப்பார்த்து என்ன?
வயிற்றுப் பசிக்கும் வாங்கிய கூலிக்கும்
இருக்கிற இடைவெளியை இட்டு நிரப்பும்
கணக்கு இன்னும் கைவரவில்லை.
உழைத்துக் காய்த்துப்போன
உள்ளங்கைப் புண்ணில்
சில்லறை உறுத்துகிறது.
பிஞ்சுக்குழந்தைக்கு பிஸ்கெட்டுக் காகும்
நெஞ்சுக்குள் நெகிழ்வு.


வல்லமை மின்னிதழின் படக்கவிதைப் போட்டி-121.  25 ஜூலை 2017

தேர்வுக் குறிப்பு:
வயிற்றில் எரியும் அங்கியை(தீ) அவிக்க அங்கையில் இருக்கும் சில்லறை போதாதெனினும் பிஞ்சுக்குழந்தையின் பிஸ்கெட் செலவுக்காவது ஆகும் என்று சிறுபிள்ளையாய் மகிழும் ஏழைமனிதனை நம் பார்வையில் நிறுத்தி நம்மை நெகிழ்த்தும் இக்கவிதையின் சொந்தக்காரர் திரு. அ. இராஜகோபாலனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்கின்றேன். அவருக்கு என் பாராட்டு!

மேகலா இராமமூர்த்தி.


சனி, 5 ஆகஸ்ட், 2017

தோட்டம்



அந்த மயானத்தில்
ஆரவாரமின்றி
அரச மரியாதையின்றி
ஊர்வலம், ஊதல், ஒதல் எதுவுமின்றி
அநாதைகளாய்
அடக்கம் செய்யப்பட்ட
விதைகளின் சமாதிகளில்
நட்டுவைத்த சிலுவைகளாய்
நிற்கும் செடிகள்
நினைவுச் சின்னங்கள்.

விமரிசனம். இலக்கியத் தொகுப்பு. விடியல் வெளியீடு. ஜூலை 1975

இது



இது
கற்பனைக் குதிரை
ககனத்தே பறந்த போது
தன்
ஒற்றைக் காலால் ஒரு பேனா
காகிதச் சாலையைக்
கடந்து போனதால்
அதன்
நடைத் தடம் படைத்தது.


நீலக்குயில்- இதழ் 15.  ஜூலை 1975.

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

மனிதனை..



சுருட்டுக் கரைகிற வரையில்
நேசித்துவிட்டுப் பின்
செருப்புக் காலால் தேய்க்கிற
மனிதனை..

இருட்டை விரட்ட
ஏற்றிவைத்து அனுபவித்துவிட்டு
வெளிச்சம் வந்ததும் வேண்டாமென்று
ஊதி அணைக்கிற
மனிதனை..

தன்
வயிற்றை நிரப்ப வாங்கி வந்தவை
வேகும் வரையில் அதன்
பசியைப் போக்கி, வளர்த்து
வெந்தபின்
உணவு மறுத்து அழித்துவிட்டுத்
தான் உண்கிற
மனிதனை..

சாகும் வரையில் காத்திருந்து
ருசித்துச் சாப்பிடும்
சிதையில்
நெருப்பு.


சதங்கை- தீபாவளி மலர் நவ.1974







போலி




குளிக்கப் போனபோது
கூடவந்து
நீரில் இறங்கிய நிழல்
கரையேறியதும்
ஈரம்போகத் துடைத்துக்கொள்ளும்
என்னைப் போலவே.

ஞானரதம். டிச.1973















மண் சொன்ன பொய்கள்


பொம்மைக் கடையில்
புகுந்தபின் அறிந்தேன்
கோழியும் வாத்தும்
குருவியும் பிறவும்
மனிதனின் தொடர்பால்
மண் சொன்ன பொய்கள்.


சோதனை- மாத இதழ். (ஆசிரியர்: நா. காமராசன்) மே. 1972




அலங்காரம்



மாலையாய்
இறைவனின் தோள்களில்
இடம் பெறாததால்
பந்தலில் தொங்கிப்
பாதி செத்தன.



சோதனை- மாத இதழ். (ஆசிரியர்: நா. காமராசன்) மே. 1972



பயம்



வீசும் காற்றுத்
தூசிவிழுமென
கண்ணை இமைத்தன
கதவுடைச்
சன்னல்கள்