தாழ்வரைத் தரையில்
கோலமாய்
ஓட்டுக் கீரலில்
ஒழுகிய வெளிச்சமும்,
சுவர்க் கொடியில்
காயத் தொங்கிய ஈரத் துணி
திரையாய் அசைய
சூரியன் தீட்டிய ஓவியச் சன்னலும்,
நிலவைத் துணைகொண்டு
திண்ணை இருக்கைக்குத்
தெருமரம் வந்ததும்,
பாராது
நாள் முழுதும்
சுவர் தடுத்த அறைக் கொட்டிலில்
காரியச் சங்கிலி கழுத்தை நெரிக்க
நாற்காலி முளையில்
நான்.