செவ்வாய், 12 செப்டம்பர், 2017

கட்டிடத் தொழிலாளர்கள்


இவர்கள்....
பரிணமிக்கிற பங்களாக்களின்
பின்னணியில்
பரிதாபத்திற்குரியவர்கள்.

கல்லும் மண்ணும்
சவாரி செய்யும்
கால்நடை வண்டிகள்.

வறுமை தோண்டுகிற
வயிற்றுப் பள்ளங்களை
உழைப்பால் நிரப்ப
தினம் முயன்று
தோற்றுப் போகிற என்
தோழர்கள்.

புகைப்படக் கவிதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது.

தினமணி கதிர். 21.8.1983.

புதன், 6 செப்டம்பர், 2017

தேசிய நெடுஞ்சாலை எண் 7

.  


நாங்கள் பாதசாரிகள்.
தந்தையும், நானும்,
தம்பியும் கூட.

பட்டுப் புடவையை விளம்பரிக்கிற
மின்சாரக் கம்பமாய்த் தங்கை.

திரும்பத் திரும்பத்
திருநெல்வேலியை
வானுலகத்துக்குப் போகிற
வழியில்
அறுபது கிலோ மீட்டரில் காட்டும்
அம்புக்குறியாய்
பக்தி மார்க்கம் பேசுகிற பாட்டி.

மைல் கல்லாய்,
தோற்றத்தில்
கடந்துவிட்ட ஐம்பதைக்
காட்டிநிற்கிற அம்மா.

இவர்களுக்கு நடுவில்
நாங்கள் பாதசாரிகள்.


தீபம். பிப்-மார்ச். 1980.