சனி, 28 பிப்ரவரி, 2026

என்னுள் நிலைத்த எழில் முகம்

 

மண்ணில் இன்னலுறும் மாந்தரெலாம் மேன்மையுற

கன்னற் றமிழதனிற் கவிபொழிந்த பாரதியின்

மின்னும் விழிகளொடும் மீசையொடும் பாகையொடும்

என்னுள் நிலைத்த எழில்முகத்திற் கீடேது?

    இலக்கியச்சோலை டிசம்பர் 2024 இதழில் வெளியானது.  இரண்டாம் பரிசு பெற்றது.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

பூக்களின் புனிதம்

 

கோனுக் குளது குடிகட் கில்லையாய்ப்

பூணும் வேடப் புன்மைகள் இலையால்

சாவு வேறுள சடங்குகள் இவையெனப்

பூவது எதையுமே பழித்திடாப் பொதுமையால்

இதழ்களை விரித்து இன்முகம் மலர்த்தி

புதுமணம் பரப்பும் பூவெலாம் புனிதமே.

 

அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை- முகநூல் 25.1.2025.

ஒழுகிசை அகவல் ஓசை உடைய நிலைமண்டில ஆசிரியப்பா

உதிரும் சருகு


 

கிளையினிற் பொலிவுடன் இருக்கும் போதே

‘இலை’யென் றீரே!  ஏனென அறியேன்.

உதிர்கிறேன். இழந்துயிர் இலையென் றானபின்

எதுசொலி அழைத்து என்னவாம் எனக்கே?

அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை – முகநூல் பதிவு

ஒழுகிசை நிலைமண்டில ஆசிரியப்பா