வெள்ளி, 7 மே, 2021

முதிர்வு முன்வந்து நின்றபோது

 


 

ஈரத் தளத்தில்

பாவி நடக்கப்

பயங் கொள்ளும் பாதங்கள்.

 

படி கண்டு தயங்கி,

மடித்து

ஏற மறுக்கும் கால்கள்.

 

விளக்கு அணைத்ததும்

வீடு பூட்டியதும்

உறுதிப்படுத்திக் கொண்டதும் மறந்து,

மறந்து விட்டோமோ என்று

பல சமயங்களில்

பதைபதைக்கும் மனது.

 

காலச்சுழலில் நழுவிய  இளமையைக்

கண்ணாடியில் தேடும் முகம்.

 

கருமை தொலைத்த

தலைமுடி தோன்றி’

முதுமை காட்டி நகைக்கும்..

 

Tamilauthors.com Minnithazh Sep. 2013

வெள்ளி, 6 நவம்பர், 2020

விவாதம்

ஒரு முடிவு தேடுவதற்கான 
தொடக்கமே 
முடிவைத் தேடிக்கொண்டது. 

 ஏ.சி. குளுமையில்
 கையைச் சுட்டது 
கா(ப்)பிக் குவளை. 

 பேசிய பின்
 கூடி இருந்தவர்கள் 
கலைந்து போனார்கள்.


மனித நேயம் ஜூலை 2006


வெள்ளி, 31 ஜூலை, 2020

பழைய நிஜங்கள்

 

 

பத்தாண்டுகளுக்குப் பின்

பழைய ஊர்.

’வணக்கம் சார்’

வருகைப் பதிவு

பாராட்டு

பதவி உயர்வு

எதுவும் இனி இல்லை.

 

என்வீடு திரும்பியாயிற்று

என்றாலும்,

 

தலை வாசல் நிலை மரத்தில்

செதுக்கிய கிளைகளில்

இலைகளாய்ப்,

பூவாய்க்,

காயாய்,

முந்நாள் நிகழ்வுகள்

நிழலாகி நிற்கின்றன நெஞ்சில்!

 

மனிதநேயம் ஏப்ரல் 2005


ஞாயிறு, 26 ஜனவரி, 2020

அறிமுகம்





’சார் யாரு?’

அப்பாவின் நெஞ்சு வலி சொல்லி, உன்
அவசரச் செலவுக்கு
ஆயிரம் கடனாய்க் கேட்டு,
அழாத குறையாய்க்
கையேந்தி நின்றபோது ஒன்று;

நான் கேட்டபோது
இல்லையென்று வாய் பொய்சொல்ல
முகம் காட்டிக்கொடுத்து விடாதபடி
மூடிக்கொண்ட மற்றொன்று;

பள்ளியில்
பையனைச் சேர்க்க
உதவமறுத்து,
உதாசீனப்படுத்தியது இன்னொன்று;

என்று
உன் மூடிமுகங்களை யன்றி
உன்னை அறியாமலேயே…..

’இவர் சோமசுந்தரம். பள்ளி ஆசிரியர்.
என் நெருங்கிய நன்பர்.’

மனித நேயம்.  மார்ச் 2005.

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

ஈர்ப்பு




அறைச் சுவரில் பெயருடன்
படிப்பும் பதவியும் பலகையில் மின்னின.

பறக்கவே பிறந்தது.
என்றாலும்,
செத்த எலிக்காகச்
செகதியில் இறங்கும்
பருந்து.

போன வேலை பொழுதொடு முடியும்
எனக்கும்.

வெள்ளி, 8 மார்ச், 2019

ஜடாயு

படித்தும் படைத்தும்
முளைத்தன சிறகுகள்.
பதவியும் பெருமையும் என்று
வீசிப்பறந்து
உயரச்சென்று உலவச் செய்தன.

சிந்தனை சிலிர்த்துச் சிதறிய,
இதயம் நுகர்ந்த
இனிய பொழுதுகளை
வலிமையுடன்
கவர்ந்து போனது
விரைந்து பறந்த காலம்.

இன்று
நரையும் திரையும்
பாரமாய்ச்
சிறகுகளில் இறங்கிச் சிதைக்க,
பார்த்தும் கேட்டும்
மகிழ்ந்த புலன்கள்
மயங்கின.
நினைவு மங்கியது.
முனகல் இருக்கும்
மூச்சு உள்ளவரை.

சனி, 1 டிசம்பர், 2018

செருப்பின் உயர்வு


.

புதிதில்லை
பழையதுதான் என்றாலும்
காணாது போகாது,
பத்திரமாய்க்
கதவுக்குப் பின்,
செருப்பைக்
கண்மறைவாய் விட்டுவிட்டுப் போ.

கல்யாணக்கூட்டத்தில்
கலந்து,
மொய் வைத்தபின்,
போய்த் தொலைந்தாலும்
தொலைந்து போனாலும்
யாருக்கு வேண்டும் நீ?

கட்டாயம் காத்திருக்கும்
காற்செருப்பு.